எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் ‘திணை’ என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை’ என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது.
இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையது. 175 புலவர்களால் பாடப்பெற்றது. தற்போது 192 புலவர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.
இதைத் தொகுத்தவர் யார் என தெரியவில்லை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.
நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணைபுரிகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்தன்மை, கல்வியாளர்களின் சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை இவை உணர்த்துகின்றன. பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கத்தையும், பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் கால்பந்து இடம்பெற்றிருந்தது போன்ற செய்திகளையும் நற்றிணையில் அறியலாம்.